அடுத்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் வாக்காளர் அட்டை
அடுத்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் வாக்காளர் அட்டை
அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுவிடும் என்று மத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா தெரிவித்தார்.
இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்டதன் வைர விழாவையொட்டி பெங்களூர் சித்ரகலா பரிஷத்தில் புகைப்படக் கண்காட்சியை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த பிறகு நவீன் சாவ்லா நமது நாட்டில் தற்போது 76 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களில் 58 கோடியே 20 லட்சம் வாக்காளர்களுக்கு ஏற்கெனவே புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுவிட்டது. இன்னும் 15 சதவீத வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.
மீதமுள்ளோருக்கு வாக்காளர் அட்டை வழங்கும் பணி அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும். தேர்தல் சமயங்களில் வாக்காளர் வாக்களிக்க வரும்போது அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையென்றால் அவர்கள் தேர்தல் அதிகாரிகளை கடிந்துகொள்கிறார்கள்.
நகர்ப்புறங்களில்தான் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. நகர்ப்புறத்தில் வசிப்போர் முதலில் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவோ, அதன் பிறகு பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்பதை முன்கூட்டியே சரிபார்க்கவோ செல்வதில்லை.
வாக்குப்பதிவு நாளில்தான் பெயர் இல்லை, முகவரி சரியில்லை என்று புகார்களுடன் வருகிறார்கள். நகர்ப்புறத்தில் பெரும்பாலானோர் தேர்தல்களில் வாக்களிப்பதே இல்லை. இந்த மன நிலை மாற வேண்டும்.
தற்போது தேர்தலுக்கு நவீன மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க அவசியம் இல்லை.
பொதுமக்களுக்கு சிரமமின்றி எளிதாக வாக்களிக்க உதவுவதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.