உ.பியில் மக்கள் பிரச்னை, மாயாவதி அரசே காரணம்: சோனியா


உ.பியில் மக்கள் பிரச்னை, மாயாவதி அரசே காரணம்: சோனியா

உத்தரப் பிரதேச மக்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளுக்கு மாயாவதி தலைமையிலான அரசே காரணம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் ​சுமத்தியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்துக்கு கோடிக்கணக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.​ எனினும் மக்கள் பயன்பெறும் விதத்தில் இந்த நிதியை மாயாவதி தலைமையிலான அரசு முறையாகப் பயன்படுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்துக்கு மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கிறது என்று முதல்வர் மாயாவதி அடிக்கடி குற்றம்சாட்டி வருகிறார்.

இந்நிலையில் மாயாவதியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சோனியா காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனது மக்களவை தொகுதியான ராய் பரேலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சோனியா காந்தி,​​ திங்கள்கிழமை கட்சித் தொண்டர்கள் கூட்டத்தில் பேசுகையில் மாயாவதி அரசுக்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டை சுமத்தினார்.

அமேதி ராகுல் காந்தி தொகுதி என்பதாலும்,​​ ராய் பரேலி எனது தொகுதி என்பதாலும் மாயாவதி தலைமையிலான அரசு புறக்கணித்து வருகிறது.​ இவ்விரு தொகுதியிலும் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களைகூட மாநில அரசு முறையாக செயல்படுத்துவதில்லை.​

மாநில அரசின் இந்த போக்கை அனைவரும் அறிவர்.​ இதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. மாயாவதி தலைமையிலான அரசு எப்படி செயல்பட்டாலும் காங்கிரஸ் தொண்டர்கள் ஒருங்கிணைந்து விழிப்புடன் செயல்பட வேண்டும்.​

மத்திய அரசு திட்டங்களின் பயன்கள் உண்மையான பயனாளிகளை சென்றடைகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.​ இதன் மூலம் ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் தங்களது சமூகக் கடமையை தவறாது ஆற்ற வேண்டும்.

நாட்டின் இதயத் துடிப்பாக காங்கிரஸ் உள்ளது.​ காங்கிரஸ் தலைமையிலான அரசிடமிருந்து மக்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன.​ இதை பூர்த்தி செய்வது நமது கடமை.​ இதற்கு ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரின் ஒத்துழைப்பும் அவசியம்.

கடந்த காலங்களில் எத்தனையோ சாதனைகளை நிகழ்த்தியுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு,​​ மகளிர் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றியதை பெரிய வெற்றியாக நினைக்கிறது.​

மக்களவையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது ராஜீவ் காந்தியின் கனவு.​ அவரின் இந்தக் கனவு ஏறக்குறைய நனவாகும் தருவாயில் உள்ளது என்று தெரிவித்தார் சோனியா காந்தி.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)