செட்டிநாடு மருத்துவமனையில் இடம்மாறிய இருதய ஆபரேஷன்


செட்டிநாடு மருத்துவமனையில் இடம்மாறிய இருதய ஆபரேஷன்

சென்னை செட்டிநாடு ஹெல்த் சிட்டி (சி.ஹெச்.சி) மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சைப் பிரிவில் இடம்மாறிய இருதய அறுவை சிகிச்சை செய்து, சாதனை புரிந்துள்ளனர் டாக்டர்கள்.

சி.ஹெச்.சி இதய நோய் சிகிச்சைப் பிரிவின் தலைவர் டாக்டர் ஆர். ரவிக்குமார், இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சொக்கலிங்கம் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் இந்த விநோத அறுவை சிகிச்சை குறித்து விளக்கிக் கூறினர்.

கடலூரைச் சேர்ந்த 55 வயதான ஒருவர் நெஞ்சுவலி காரணமாக செட்டிநாடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதில், சம்பந்தப்பட்ட நோயாளியின் இதயம், வழக்கமாக அனைவருக்கும் இருப்பதைப் போல் இல்லாமல் வலப்புறம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இதுபோன்ற நிலை ஏற்படலாம் என்றாலும், 55 வயது வரை இருந்துள்ளார் என்பது மருத்துவ உலகில் வியப்பாக அமைந்தது.

மேலும் ஈரல், இரைப்பை, நுரையீரல்கள் ஆகியவையும் இடம் மாறியிருப்பது தெரிய வந்தது. கண்ணாடியில் காணும் பிம்பம் போல் அவருக்கு உடல் உறுப்புகள் மாறியுள்ளது.

பிறவியிலேயே இவருக்கு இதுபோன்று இடம் மாறியிருந்திருப்பதால், மற்ற உடல் உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. இதயத்தில் ரத்தக்குழாய்களில் அடைப்பும் இருந்துள்ளது. எனவே இந்த நோயாளிக்கு தமிழக அரசின் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய தீர்மானிக்கப்பட்டது.

பொதுவாக இதுபோன்ற அறுவை சிகிச்சையின் போது, இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள், வலதுபுறம் நின்று கொண்டு, இடப்புறமாக உள்ள இதயத்தில் ஆபரேஷன் மேற்கொள்வார்கள்.
ஆனால் இந்த நோயாளிக்கு இடப்புறத்தில் நின்று கொண்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

தவிர, அனைத்து உடல் உறுப்புகளுமே இடம் மாறியிருந்ததால், சிக்கல் நிறைந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செட்டிநாடு மருத்துவமனையின் கைதேர்ந்த நிபுணர்கள் செய்து முடித்துள்ளனர்.

சிகிச்சைக்குப் பின் நோயாளி 3-வது நாளே எழுந்து நடக்கத் தொடங்கியுள்ளார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், ஓரிரு நாளில் அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்படுவார் என்றும் டாக்டர்கள் ரவிக்குமாரும், சொக்கலிங்கமும் தெரிவித்தனர்.

அவரது உடல் உறுப்புகள் வழக்கம் போல் செயல்படுவதாகவும் தெரிவித்த டாக்டர்கள், கடந்த ஓராண்டிற்கு முன் இதேபோன்றதொறு அறுவை சிகிச்சை ஹைதராபாத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும், சென்னையில் இதுபோன்ற இடம் மாறிய இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்றும் கூறினர்.

செய்தியாளர்கள் முன் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளியும் நிறுத்தப்பட்டார். தற்போது அவர் பூரண  குணம் அடைந்து விட்டதாகக் குறிப்பிட்டார்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)