பிரெஞ்ச் ஓபன்: நடால் மற்றும் ஷியாவோன் சாம்பியன்


பிரெஞ்ச் ஓபன்: நடால் மற்றும் ஷியாவோன் சாம்பியன்

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டினார் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால்.  மகளிர் ஒற்றையர் பட்டத்தை இத்தாலியின் பிரான்செஸ்கோ ஷியாவோன் வென்றார்.

நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் அபார வெற்றி பெற்ற இவர், 5வது முறையாக கோப்பை கைப்பற்றி சாதனை படைத்தார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பைனலில் ரபெல் நடால், சுவீடனின் ராபின் சோடர்லிங்கை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்தப் போட்டியில் முதல் செட்டை 6-4 என கைப்பற்றிய நடால், 2வது செட்டை 6-2 என மிகச் சுலபமாக தன்வசப்படுத்தினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால், 3வது செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி வெற்றிபெற்றார்.

சுமார் 2 மணி நேரம் 18 நிமிடம் நடந்த இப்போட்டியில், நடால் வெற்றி பெற்று, 5வது முறையாக (2005-08, 2010) பிரெஞ்ச் ஓபன் கோப்பையை வென்றுள்ளார்.

பிரெஞ்ச் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற நடால், ஏ.டி.பி., டென்னிஸ் ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் மீண்டும் நம்பர்-1 இடத்துக்கு முன்னேறினார். இதனால் முதலிடத்தில் இருந்த சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

நடால் பெறும் 7-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். இவர் இதுவரை ஆஸ்திரேலிய ஓபன் (2009), பிரெஞ்ச் ஓபன் (2005-08, 2010), விம்பிள்டன் (2008) தொடரில் கோப்பை வென்றுள்ளார். ஆனால் யு.எஸ்., ஓபனில் ஒருமுறை கூட பட்டம் வென்றதில்லை.

கடந்த 2008, 09ம் ஆண்டில் நடந்த யு.எஸ்., ஓபனில், அரையிறுதி வரை முன்னேறினார்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)