மக்கள் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும்


மக்கள் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும்

image

ஸ்ரீவில்லிபுத்தூர்: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெறும் 30, 40 தொகுதிகளுக்காக எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க. சார்பில் சிவகாசி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

வரும் தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது பற்றி கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் குழப்பம் அடையத் தேவையில்லை. நிச்சயமாக 30, 40 தொகுதிகள் தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். மேலும், தே.மு.தி.க. அமைக்கும் கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணியாக இருக்கும் என்றார்.

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. அவ்வாறு செய்திருந்தால் நான் ஏன் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்க வேண்டும்?

மாநிலத்தில் வறுமையை ஒழிப்பதிலும், அனைவருக்கும் வேலைவாய்ப்பு தருவதிலும் இரு கட்சிகளுமே தோல்வியடைந்து விட்டதாக விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.

வரும் தேர்தலில் பணத்தின் மூலம் வெற்றி பெற்று விடலாம் என்று தி.மு.க. தப்புக் கணக்கு போடுகிறது. அது நிச்சயம் வரும் தேர்தலில் நிறைவேறாது என்று குறிப்பிட்ட அவர், தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் விவசாயிகளை ஏமாற்றி, அவர்களது வாக்குகளைக் கவருவதற்காகவே இலவச பம்ப்செட் வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது என்றார்.

விவசாயத்துக்குத் தேவையான மின்சாரத்தை ஒழுங்காக வழங்க முடியாத கருணாநிதி, பம்ப்செட் வழங்கப் போவதாக அறிவித்திருப்பது குறுக்கு வழியில் விவசாயிகளின் வாக்குகளைப் பெறவே என்பது எங்கள் குற்றச்சாட்டாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மின்சார உற்பத்தியை அதிகரிக்க இந்த ஆட்சியில் இதுவரை நிரந்தரத் திட்டங்கள் எதுவும் வகுக்கப்படவில்லை என்றும், சேது சமுத்திரத் திட்டம் சரியான முறையில் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருந்தபோது, முதல்வர் கருணாநிதி மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசியதால்தான் இப்போது அது கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றார் விஜயகாந்த்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)