மாற்றுத்திறனாளிகளுக்கான ரோட்டா-திறனறியும் போட்டி


மாற்றுத்திறனாளிகளுக்கான ரோட்டா-திறனறியும் போட்டி

சென்னை தியாகராயநகர் ரோட்டரி சங்கத்தின் 25ஆம் ஆண்டு விழாவையொட்டி, ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான திறமையை நிரூபிக்கும் - ரோட்டா திறனறியும் போட்டிகளை வரும் 22ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளின் மாற்றுத் திறன் படைத்த 5 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்-சிறுமியர் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.

ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், பாட்டு, நடனம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாற்றுத் திறளாளி குழந்தைகளும், ஆதரவற்ற குழந்தைகளும் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர்.

இதுபோன்ற நிகழ்ச்சியை தி.நகர் ரோட்டரி சங்கம் கடந்த 19 ஆண்டுகளாக நடத்தி வருவதாக ராஜன் கண் மருத்துவமனை தலைவர் டாக்டர் மோகன் ராஜன் உள்ளிட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

போட்டியில் கலந்து கொள்ளும் குழந்தைகள் மற்றும் அவர்களுடன் வருவோருக்கு காலை, மதிய உணவு மற்றும் தேநீர் உள்ளிட்டவற்றை ரோட்டரி சங்க உறுப்பினர்களும், அவர்களின் குடும்பத்தினரும் வழங்குவார்கள்.

போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு அன்று மாலை நடைபெறும் பரிசளிப்பு விழாவில் திரைப்பட நடிகர் ஒருவர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்குவார். முதல் பரிசு ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 3 ஆயிரம், 3-வது பரிசு ரூ. 2 ஆயிரம் வழங்கப்படுவதோடு, போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பரிசு வழங்கப்படும்.

மாற்றுத்திறளாளிகளுக்கான பள்ளிகளுக்கு இலவச கணினிகளை நோவல் இந்தியா நிறுவனம் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.

ஏழை பெண் குழந்தைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக, அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.நகர் ரோட்டரி சங்கம் செலுத்தவுள்ளது. வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் பெண் குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகளின் கல்விச் செலவையும் தி.நகர் ரோட்டரி சங்கம் ஏற்கிறது.

மேலும் இந்த சங்கத்தின் முக்கிய சேவையாக கண்தானம் குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. கல்லூரி மாணவர்களுக்காக சென்னை ராஜன் மருத்துவமனையில் கண் தானம் பற்றிய முகாம்கள் நடத்தப்படுகின்றன.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)