மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு சீனா உதவவில்லை


மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு சீனா உதவவில்லை

image

புதுடெல்லி: மேற்குவங்கம், ஒரிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களில் செயல்படும் மாவோயிஸ்டுகளுக்கு சீனா உள்ளிட்ட வெளிநாடுகள் உதவுவதாக எந்த ஆதாரமும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது புதன்கிழமை இதை அவர் தெரிவித்தார்.

மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் அதை நிரூபிக்கும் ஆதாரங்கள் எதுவும் அரசுக்கு கிடைக்கவில்லை. மேலும் மாவோயிஸ்டுகளுக்கு தேச விரோத சக்திகள் உதவுகின்றனவா என்பது பற்றிய தகவலும் அரசுக்கு வரவில்லை.

அதற்கான ஆதாரங்களும் அரசுக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் நேபாளத்தில் உள்ள அமைப்பு ஒன்றுக்கும் நெருக்கம் இருப்பதாக மட்டும் உறுதி செய்யப்படாத தகவல் அரசுக்கு கிடைத்துள்ளது என்றார்.

இருப்பினும், மாவோயிஸ்டுகளுக்கு வெளிநாடுகள் உதவுவதாக வரும் செய்தி அடிப்படையில் அது எந்த அளவுக்கு உண்மை என்பதை உறுதி செய்ய இந்தியாவுக்கு நேசமாக உள்ள நாடுகளின் உதவியை கோர அரசு திட்டமிட்டுள்ளது.

மிரட்டி பணம் பறிப்பது மற்றும் வங்கிகளிடமிருந்து பணத்தை சூறையாடுவது போன்ற வழி முறைகளை கையாண்டு மாவோயிஸ்டுகள் நிதி திரட்டுகின்றனர். மியான்மர், வங்கதேச எல்லை வழியாக ஆயுதங்களை கடத்தி வருகின்றனர் என்றும் சிதம்பரம் கூறினார்.

மாவோயிஸ்டுகள் தம்மிடம் உள்ள கறுப்பு பணத்தை வெளியே கொண்டுவர நடவடிக்கை எடுப்பது பற்றி துணைக்கேள்வி எழுப்பியபோது பதிலளித்த சிதம்பரம், இது சம்பந்தமாக நிதி அமைச்சகம் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

கள்ள நோட்டுகள் புழக்கம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்த பிரச்னை ரூபாய்க்கு மட்டும் இல்லை பிற வெளி நாட்டு கரன்சிகளிலும் கள்ள நோட்டு பிரச்னை  காணப்படுகிறது என்றார்.

ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ப்பு மாவோயிஸ்டு அமைப்பின் சதிவேலை: மாவோயிஸ்டு இயக்கத்தின் அமைப்பு ஒன்று ரயில்வே பாதையை தகர்த்ததால்தான் மே 28ம் தேதி ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்தது என விசாரணையில் தெரியவந்தது என அவையில் பதிலளித்து பேசுகையில்  சிதம்பரம் மேலும் தெரிவித்தார்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)