யுவராஜ் அபாரம்: அரையிறுதியில் இந்தியா


யுவராஜ் அபாரம்: அரையிறுதியில் இந்தியா

image

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, அரையிறுதிக்குள் நுழைந்தது. 3 முறை உலகக் கோப்பையை வென்ற நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா உலகக் கோப்பை காலிறுதி போட்டியுடன் நாடு திரும்புகிறது.

அரையிறுதிக்குள் நுழைந்துள்ள இந்திய அணி, வரும் புதன்கிழமையன்று மொஹாலியில் நடைபெறும் முதலாவது அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

அகம்தாபாத்தில் வியாழக்கிழமையன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 260 ரன் சேர்த்தது. கேப்டன் ரிக்கி பாண்டிங் சிறப்பாக ஆடி 104 ரன் குவித்த போதிலும், அவரது சதம் வெற்றிக்கு உதவியாக அமையவில்லை. ஹாடின் 53 ரன்னும், மைக் ஹஸி ஆட்டமிழக்காமல் 38 ரன்னும் சேர்த்தனர். வாட்சன் 25 ரன் எடுத்தார்.

இந்திய பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜாகிர் கான், யுவராஜ் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்த்னர்.

261 ரன் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர் இருவரும் வலுவான தொடக்கத்தை அளித்த போதிலும், சேவாக் 15 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

என்றாலும் சச்சின், கவுதம் காம்பீர் இணை அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சச்சின் 53 ரன் எடுத்திருந்த போது, டைட் பந்தில், விக்கெட் கீப்பர் ஹாடினிடம்  கேட்ச் கொடுத்து வெளியேறினார். காம்பீர் அரைசதம் எடுத்த நிலையில், ரன் அவுட் ஆகி வெளியேறினார். விராட் கோலி 24 ரன்னும், கேப்டன் மகேந்திர சிங் தோனி 7 ரன்னும் மட்டுமே சேர்த்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த யுவராஜ் சிங் - சுரேஷ் ரெய்னா இணை இறுதி வரை நிலைத்து நின்று விளையாடி வெற்றி தேடித் தந்தனர்.

யுவராஜ் அபாரமாக விளையாடி 57 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரெய்னா 34 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இந்திய அணி 47.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 261 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ, டைட், வாட்சன், ஹஸி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இதுவரை 3 முறை உலகக் கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலியா காலிறுதிப் போட்டியுடன் திருப்தியடைய வேண்டியதாயிற்று. 

5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, அரையிறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியை மொஹாலியில் வரும் புதன்கிழமை எதிர்கொள்கிறது.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)