ராகிங்கை ஆசிரியர்கள் தடுக்க வேண்டும்: பிரதீபா பாட்டீல்


ராகிங்கை ஆசிரியர்கள் தடுக்க வேண்டும்: பிரதீபா பாட்டீல்

image

புதுடெல்லி: கல்வி நிறுவனங்களில் நடைபெறும் ராகிங் என்ற மோசமான நிகழ்வை ஆசிரியர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வலியுறுத்தினார்.

டெல்லியில் ஆசிரியர் தினத்தையொட்டி 374 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கிப் பேசுகையில் அவர் இதை வலியுறுத்தினார்.

கல்லூரிகளில் நடைபெறும் ராகிங் நிகழ்வுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து அவர் மேலும் பேசியது:

நாடு முழுவதும் கல்லூரிகளில் மூத்த மாணவர்கள் தங்களுக்கு கீழ் படிக்கும் மாணவர்களை ராகிங் என்ற பெயரில் கொடுமைப்படுத்துவது பரவலாக நடைபெறுகிறது.

கல்லூரி மாணவர்களிடம் சகிப்புத் தன்மை இல்லாததையே இது காட்டுகிறது. ராகிங் எங்கு நடந்தாலும் கண்டிக்கத்தக்கது. இது தொடர்வது ஆரோக்கியமானதல்ல. கல்வி நிறுவனங்களில் நடைபெறும் ராகிங்கை முற்றிலும் ஒழிப்பதற்கு ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும்.

அனைவருக்கும் கல்வி கிடைக்க முயற்சி எடுத்து வருகிறோம். இதை அடிப்படை உரிமையாக்கியுள்ளோம். அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்வதென்பது  தனிப்பட்டவருக்கான பொறுப்பல்ல. இதில் அனைவருமே பங்கேற்க வேண்டும். அனைவருக்கும் கல்வி அளிப்பதென்பது சவாலான விஷயமாக இருந்தாலும் சாத்தியமான ஒன்றுதான்.

மாணவர்களின் பிரச்னைகளை அறிந்து அவர்கள் அதில் இருந்து மீண்டுவர ஆசிரியர்கள் உதவ வேண்டும். மாணவர்களின் பெற்றோர்களுடன் தொடர்பை வைத்துக்கொண்டால் மாணவர்களின் பிரச்னைகளை எளிதாக அறிந்து கொள்ள இயலும்.

கிராமப்புறங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு தினசரி வருகை தர வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு தினசரி வருவதை உறுதி செய்ய வேண்டும்.

வெளிப்படைத்தன்மை அவசியம்: இந்த விழாவில் பேசிய மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், ஆசிரியர்கள் நியமனம், பணியிட மாற்றம் ஆகியவை வெளிப்படையாக நடைபெறும் விதத்தில் அனைத்து மாநிலங்களும் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதுபோன்ற விதிமுறைகளை வகுத்து தீவிரமாகக் கடைப்பிடித்தால்தான் கல்வி உரிமை சட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)