வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் மீது துப்பாக்கிச் சூடு


வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் மீது துப்பாக்கிச் சூடு

வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பினார். கொலை செய்ய வந்தவன் யார், இதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தில் தீய சக்திகளுக்கு தொடர்புள்ளது என்று ரவிசங்கர் தெரிவித்தார்.பெங்களூரு கனகபுரா ரோட்டில், வாழும் கலையின் ஆசிரமம் உள்ளது. இங்கு ஒன்பது நாட்களாக ஆன்மிக நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் : இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஒன்பதாவது நாளான நேற்று நிகழ்ச்சி முடிந்த பின், ரவிசங்கர் காரில் ஏறுவதற்காக வெளியில் வந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ரவிசங்கரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இச்சம்பவத்தில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

தொடர்ந்து வந்த பக்தரின் கையில் துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டது.இதனால், ஆசிரமத்தில் பெரும் பரபரப்பும், பதட்டமும் காணப்பட்டது. பக்தர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டிலிருந்து ரவிசங்கர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

உடனடியாக, அவர் பாதுகாப்பாக காரில் அழைத்துச் செல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பக்தர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.ரவிசங்கர் மிக அருகில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது, பக்தர்களை பாதித்துள்ளது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கி குண்டை சுற்றியிருந்த கவர் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தையடுத்து, ஆசிரமத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)