விஞ்ஞானிகளை உருவாக்க வேண்டிய தருணம் - பிரதமர்


விஞ்ஞானிகளை உருவாக்க வேண்டிய தருணம் - பிரதமர்

இந்திய விஞ்ஞானிகள் மிகப்பெரிய அளவில் யோசிக்க வேண்டும் என்றும், தங்களின் வட்டத்தில் இருந்து வெளியே வர வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் இன்று காலை 98-வது இந்திய அறிவியல் மாநாட்டைத் தொடங்கிவைத்துப் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்திய விஞ்ஞானிகள் மிகப்பெரிய அளவில் சிந்திக்க வேண்டிய தருணம் வந்து விட்டதாகவும், தங்களின் எல்லையை விட்டு வெளியே வந்து விஞ்ஞானிகள் சிந்தனையை பரந்துபட்டதாக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கோண்டார்.

சர்.சி.வி. ராமன்களையும், கணித மேதை ராமானுஜம் போன்றவர்களையும் இந்தியாவில் உருவாக்க வேண்டிய வேளை வந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விஞ்ஞானிகள் தங்களின் கண்டுபிடிப்புகளை அதிகப்படுத்துவதன் மூலம் விஞ்ஞானத்தில் இந்தியா முன்னேற்றத்தை அடைய முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், அதற்கான பணிகளில் அரசு ஏற்கனவே செயலாற்றிக் கொண்டுள்ளது என்றார்.

பல்கலைக்கழக முறையை மேம்படுத்துவதற்கு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

கடந்த 6 ஆண்டுகளில் 8 தொழில்நுட்பக்கழகங்களையும், நிறுவனங்களையும் மத்திய அரசு ஏற்படுத்தியிருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

உலகம் முழுவதிலும் இருந்து 7 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் 6 பேர் நோபல் பரிசு வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)