T -20 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா வெற்றி


T -20 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா வெற்றி

மகளிர் இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பார்படாஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா,​​ நியூசிலாந்து அணிகள் மோதின.​ ​

டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய நியூசிலாந்து அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 103 ரன்களே எடுக்க முடிந்தது.​ இதனால் ஆஸ்திரேலிய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு ஏலிஸ் வில்லானி,​​ ஷெல்லி நிட்ஸ்ஜ் ஆகியோர் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்.​

அணியின் ஸ்கோர் 10 ரன்களை எட்டியபோது ஷெல்லி நிட்ஸ்ஜ் ஆட்டமிழந்தார்.​ அவர் 5 பந்துகளில் 3 ரன்கள் எடுத்தார்.​ இதையடுத்து சியா போல்டன் களம் கண்டார்.​ ​

ஆஸ்திரேலிய அணி 14 ரன்களை எட்டியபோது ​ மற்றொரு துவக்க ஆட்டக்காரர் ஏலிஸ் வில்லானி 10 பந்துகளில் 6 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.​

இதையடுத்து களமிறங்கிய கேப்டன் அலெக்ஸ் பிளாக்வெல் நியூசிலாந்து வீராங்கனைகளின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினார்.​ 7 பந்துகளைச் சந்தித்த அவர்,​​ ரன் எடுக்காமலேயே பெவிலியன் திரும்பினார்.​ ​ ​

இதனால் ஆஸ்திரேலிய அணி 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்துக்கொண்டிருந்தது.​ அவரைத்தொடர்ந்து போல்டனுடன்,​​ ஜெஸ் கேமரூன் ஜோடி சேர்ந்தார்.​

இந்த ஜோடி பொறுப்பை உணர்ந்து நிதானமாக விளையாடியது.​ இதனால் அணியின் ​ஸ்கோர் ஆமை வேகத்தில் உயர்ந்தது.​ ​

அணியின் ஸ்கோர் 50 ரன்களை எட்டியபோது பொறுமைகாத்த இந்த ஜோடி பிரிந்தது.​ அந்த அணியின் சியா போல்டன் 28 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.​

அவரைத்தொடர்ந்து ​ ஜெஸ் கேமரூனும் பிராட்மோர் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்து வெளியேறினார்.​ அவர் 24 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார்.​ ​

அதன்பிறகு களமிறங்கிய வீராங்கனைகள் சற்று அதிரடி காட்டியதால் அணியின் ஸ்கோர் சற்று உயர்ந்தது.​ சரா எலியட் 19 ரன்களும்,​​ அலீசா ஹீலி 10 ரன்களும்,​​ லிசா ஸ்தால்கர் 18 ரன்களும் எடுத்தனர்.​ இவர்களில் எலியட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு

சூசி பேட்ஸ்,​​ கேப்டன் எய்மி வாட்கின்ஸ் ஆகியோர் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.​

அணியின் ஸ்கோர் 16 ரன்களை எட்டியபோது எய்மி வாட்கின்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.​ அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சாரா மெக்லசன் 1 ரன்களில் ரன் அவுட் ஆகி ஏமாற்றினார்.​

இதையடுத்து ஸ்போகி டெவினி,​​ சூசி பேட்ஸடன் ஜோடி சேர்ந்தார்.​ இந்த ஜோடி சிறிது நேரத்திலேயே பிரிந்தது.​ துவக்க ஆட்டக்காரர் சூசி பேட்ஸ் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.​

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அமி ஸ்டெர்த்வெய்ட் 4 ரன்களுக்கும்,​​ ரேச்சல் பிரிஸ்ட் 5 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.​

அதன்பிறகு வந்த நிகோலா பிரோவ்னி 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.​ ​

இறுதியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 103 ரன்களே எடுக்க முடிந்தது.​ ஸ்போகி டெவினி 38 ரன்களுடனும்,​​ பெர்ரி 4 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.​ ​ ​

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)